ஆறே வார்த்தைகளில் இந்த கதையை முடிக்க முடியுமா?

சொப்பனம் பலிக்குமா?

சொப்பனங்களில் நம்பிக்கை வைக்கிற ஜனங்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவை பலிதமாகும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னமோ, சொப்பனத்தைப் பற்றி இரண்டாந்தரம் நினைக்கக் கூடத் தோன்றுகிறதில்லை. இருந்தாலும் இதைக் கேளுங்கள், ரொம்ப அபூர்வமான விஷயம்.

ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாலே, நான் ஒரு சந்து வழியாக நடந்து கொண்டிருக்கிறாப் போலிருந்தது. போகப் போக அந்தச் சந்தும் போய்க்கொண்டே இருந்தது. ஏது, முடிவே கிடையாது போலிருக்கிறதே என்றுகூட நினைத்து விட்டேன். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தச் சந்து எங்கிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சமயம் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் பக்கத்தில் நாற்றமடித்துக்கொணடிருக்கும் சந்தாக இருக்குமோ என்று தோன்றும். மற்றொரு சமயம், அப்படியிருக்க முடியாது, திருவிடமருதூரில் வடம்போக்கியோடு பொதுஜன சௌகரியத்துக்காக இருக்கும் சந்து தானோ என்று தோன்றும். எனக்கு இது விஷயம் கவலையாகத் தானிருந்தது. ஆனால் லக்ஷியம் செய்யாமல் மேலே நடந்து போய்க் கொண்டிருந்தேன்.

சட்டென்று ஒரு வீட்டு வாசலுக்கு வந்து நின்றேன். இந்த வீட்டுக் கதவை இடித்தாலென்ன என்று தோன்றிற்று எனக்கு. அப்படியே இடித்தேன். கதவைத் திறந்துகொண்டு, ரொம்ப ரொம்பக் கிழவனாக ஒருவன் வந்தான்.

"உங்கள் வீட்டுக் கதவை இடித்தது எதற்கென்றால்…" என்று ஆரம்பித்தேன்.

ஆனால் அந்தக் கிழவன் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே போய் விட்டான்.

ஒருகால் இவன் இந்த வீட்டுக்காரனாயிருக்கமாட்டான். வேறு யாராவது வருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, வெகு வெகு அழகான மங்கை ஒருத்தி வந்தாள். நான் கண்ணில் பட்டதும், சட்டென்று பின்வாங்கி, தடாரென்று கதவைச் சாத்திக்கொண்டு போய் விட்டாள்.

இதேதடா வம்பாயிருக்கிறது என்று அப்படியே திண்ணையில் சற்று நேரம் உட்கார்ந்தேன். சுமார் பத்து நிமிஷம் உட்கார்ந்திருப்பேன். வெகு தூரத்தில் ஒரு மோட்டார் வரும் சப்தம் கேட்டது. மேலும் பதினைந்து நிமிஷங்கள் காத்திருந்தும், அந்த மோட்டார் வரும் சப்தம் கேட்டதே யொழிய, அது சமீபத்தில் வந்ததாகக் காணவில்லை. எனக்கென்னவோ பயமாகப் போய்விட்டது. வந்தது வரட்டுமென்று அந்த வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

சுற்றும் ஒரே இருட்டாக இருந்தது; ரேழியைத் தாண்டி, கூடத்துக்குப் போனேன்; யாருமில்லை. தொடர்ந்து சென்று அறை அறையாக நுழைந்தேன். கடைசியில் ஓர் அறையில் மேஜை நாற்காலி போட்டு ஒருவர் வாசிப்பதற்குத் தயாராய்ப் புத்தகமும் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு டம்ளரில் காப்பி இருந்தது. அது சுட்டுக்கொண்டிருந்தது!

"அடே!" என்று ஆச்சரியத்துடன் என்னையறியாமல் சொல்லிவிட்டேன்.

இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. நான் நின்று கொண்டிருந்த அறைக் கதவு மெதுவாக மூடிக்கொள்வது தெரிந்தது!

நான் பிரமித்து விட்டேன். ஏனெனில் அதை யாரும் சாத்தவில்லை. அது தானாகவே மெதுவாய்ச் சப்தம் செய்யாமல் சாத்திக் கொண்டிருந்தது.

எனக்கு இப்போது ஒரு பயம் தோன்றிற்று. அது ஏன் தோன்றிற்று என்று எனக்கே தெரியாது. இந்தக் கதவு பூராவும் சாத்திக்கொண்டால், ஏதோ பெரிய விபத்து ஏற்படும் என்று மட்டும் சந்தேகமின்றித் தோன்றிவிட்டது எனக்கு. ஆகவே நான் ஒரே பாய்ச்சலாகக் கதவின் சமீபம் பாய்ந்து சென்றேன். கதவையும் பிடித்து விட்டேன். என் வாய் என்னையும் அறியாமல் என்னென்னவோ கத்திக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று...

"என்ன, தூக்கத்தில் உளறுகிறீர்கள்?" என்றாள் ராஜி.

சட்டென்று விழித்துக்கொண்டு விட்டேன். கண்டதெல்லாம் வெறும் சொப்பனம்.

எனக்குத் தான் சொப்பனத்தின் மேல் நம்பிக்கை கிடையாதென்று முன்னமேயே சொல்லி இருக்கிறேனே! ஆகையால் எல்லாவற்றையும் மறந்துவிடத் தீர்மானித்து மறந்தும் போய்விட்டேன். இதெல்லாம் ஏழெட்டு வருஷத்திற்கு முந்தி நடந்தவை என்று முதலிலேயே சொன்னதும் ஞாபகம் இருக்கட்டும்.

மறுபடி கேளுங்கள். போன வெள்ளிக்கிழமை இரவு, நான் ஒரு சந்தின் வழியாகப் போய்க்கொண்டேயிருந்தேன். சட்டென்று என் மனத்தில் ஒரு விஷயம் பட்டது. அந்தச் சந்தை அதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போலத் தோன்றிற்று.

எங்கே பார்த்திருக்கலாம் என்று யோசனை செய்து கொண்டே மேலும் மேலும் நடந்துகொண்டே போனேன். "ஏது, இதற்கு முடிவே இராது போலிருக்கிறதே" என்று தோன்றிற்று. திடீரென்று ஒரு வீட்டைக் கண்டதும் என்னையும் அறியாமல் நின்றேன். ஒரு பீதி வந்து என்னைப் பற்றிக் கொண்டது. என் தேகம் பூராவும் மயிர் குத்திட நின்றது.

அந்த வீட்டை எனக்குத் தெரியும். கதவை இடித்தால் ஒரு கிழவன் வந்து திறப்பான். திறந்து விட்டுப் பேசாமல் போய் விடுவான்.

அப்படியே கதவை இடித்தேன். இடிக்காமல் இருக்க முடியவில்லை. முன் போலவே ரொம்ப ரொம்பக் கிழவர் ஒருவர் வந்து, என் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் போனார். திண்ணையில் வந்து உட்கார்ந்து கொணடேன். ஒரு பெண்மணி வந்து பார்த்து விட்டுத் திடுக்கிட்டுப் பின் வாங்கி, கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டு சென்றாள். "என்ன! எட்டு வருஷத்துக்கு முன் கண்ட ஒரு சொப்பனமும் இப்படி உண்மையாய் நடக்க முடியுமா!" என்று நான் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போதே, மோட்டார் வருவது போன்ற சத்தம் கேட்டது.

ஆனால் அது வராதென்று எனக்குத்தான் தெரியுமே! வீட்டுக்குள் தைரியமாய் நுழைந்தேன். முன்போல் அது ஜன சூன்யமாகத்தான் இருந்தது. கடைசியில் மேஜை நாற்காலி போட்டிருந்த அறைக்குள்ளும் வந்தேன். புத்தகம் பிரித்தபடிதான் இருந்தது. காப்பியும் சுட்டுக் கொண்டுதானிருந்தது.

நான் முன் ஜாக்கிரதையாக நடந்து கொண்டேன். நுழைந்தவுடனேயே கதவின் மேல் ஒரு கண் வைத்து விட்டேன். வாயைத் திறந்து ஒரு கத்தலும் போடவில்லை. இதெல்லாம் எனக்குப் புதிதா, என்ன? முன்னே ஒரு தரம் சொப்பனத்தில் கண்ட விஷயங்கள்தானே?

கதவு இன்னும் சாத்திக்கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஒரே பாயச்சலாய்ப் பாய்ந்து சென்று கதவின் சமீபத்தை அடைந்தேன். அதைக் கெட்டியாய்ப் பிடித்து என் பலங் கொண்ட மட்டும் அழுத்தினேன். அப்போது சட்டென்று எதிர்பாராத விதமாய் - என்ன நடந்திருக்குமென்று உங்களுக்குத் தோன்றுகிறது?


இப்போ ஜக்கு: வாத்யார், அம்பது வருஷத்துக்கு முன்னால அமரர் தேவன் (துப்பறியும் சாம்பு எளுதின ஜீனியஸ்!) இந்த கதையை இன்னும் ஆறே வார்த்தைகளில் முடிச்சுட்டார். ட்ரை பண்ணி பாருங்க...

...

...

...

...

...

...

...

...

...

...

...


ஆமாம், தூக்கத்திலிருந்து மறுபடி விழித்துக் கொண்டு விட்டேன்!மறுபடியும் ஜக்கு: இன்னாமா ஒரு எளுத்தாளர் தேவன். சிஐடி சந்துரு படிச்சி கீறீங்களா வாத்யார்?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

9 comments:

கோவி.கண்ணன் said...

:)

கோவி.கண்ணன் said...

//தூக்கத்திலிருந்து மறுபடி விழித்துக் கொண்டு விட்டேன்!
//

தலையில் யாரோ தண்ணீர் ஊற்றுவது போல் இருந்தது அப்பறம் தான் தெரிந்தது அதே கனவு மீண்டும் வந்திருக்கிறது என்று !

:)

சென்ஷி said...

:-)

சூப்பர்!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சூப்பர்ண்ணே இந்த மாதிரி கதைகளை அடிக்கடி போடுங்கண்ணே....,

Anonymous said...

//அம்பது வருஷத்துக்கு முன்னால அமரர் தேவன் (துப்பறியும் சாம்பு எளுதின ஜீனியஸ்!) இந்த கதையை இன்னும் ஆறே வார்த்தைகளில் முடிச்சுட்டார். ட்ரை பண்ணி பாருங்க...//

The story is superb. Your presentation is also excellent! Thanks Jaggu Sir!

யாழிசை said...

படா சோக்கா கீது நைனா...
படிச்சிட்டு மெர்சல் ஆயிட்டேன்...

Jawarlal said...

""கதவைப் பிடிச்சிகிட்டு என்ன பண்றீங்க?" என்றாள் மனைவி.

http://kgjawarlal.wordpress.com

வெ.இராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு அருமையான கதை. மிகவும் சிறப்பு. ஆறே வார்த்தைகளில் அழகாகவே முடித்திருக்கிறார்.

Tamilish said...

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'ஆறே வார்த்தைகளில் இந்த கதையை முடிக்க முடியுமா?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th August 2009 01:55:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/96940

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team


ஈ மெயிலில் வந்தது வாத்யார்.

இப்ப்டிக்கு
ஜாம்பஜார் ஜக்கு