செட்டியார் பேட்டைதான் Chetpet என்று மாறியதா?!




இந்த சென்ட்ரல் ஸ்டெஷன், மீசியம், லா-காலேஜு மாதிரி பில்டிங்கை அல்லாம் பொதுவா "பிரிட்டிஷ்காரன் கட்டுனது" அப்டீன்னு ரொம்ப பேரு சொல்லி கேள்வி பட்டுகிறோம். ஆனா அதை அல்லாம் கட்னது ஒரு மெட்ராஸ்காரர் அதுவும் ஒரு தமிழர் அப்டீன்னு படிச்சு ரொம்ப ஆச்சரியமா(வும் சந்தோஷமாவும்) பூட்சு வாத்யார்!

பட்சு பாருங்க!


தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார்!

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, 'தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார் என்பவர்.பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த இவரது மாளிகை, "வெள்ளை மாளிகை' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின்னால் உள்ளது.இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன.இது அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப் பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.


எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு அவருக்கு சொந்தமாக இருந்தது.அதனால், "செட்டியார் பேட்டை" என அழைக்கப் பட்டது. நாளடைவில், "செட்டிபேட்டை' என மருவி, இன்று, "செட்பெட்' என மாறிவிட்டது. அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், அமைதியை விரும்பியதால், செட்டியாரின் நிலத்தை வாங்கி, அவரையே வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண் டனர்.அப்பகுதியில் இன்றும் அனேக வீடுகள் ஆங்கிலேய பெயர்களாக காசா மேஜர், ஜாரட்ஸ் கார்டன் (தற்போது சமூக சேவா பள்ளி) ஹாரிங்டன், பாந்தியன் என்று பெயர்.


கணிதமேதை - ராமானுஜம்: காலம் சென்ற கணித மேதை கடைசி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார்.இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் அதிகமாகி விட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக் கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். தமிழ்நாடு மிகப்பெரிய கணிதமேதையை இழந்தது. அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற முதல் வைசியர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது.


தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் தனி ரயில் வண்டி வைத்திருந்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.


தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோவில்களின் திருப் பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வடசென்னையில் பல பள்ளிகளும், சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் நடைபெறுகின்றன.சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.





இன்னா மாதிரியான பெரிய மன்சங்கல்லாம் நம்ம மெட்ராஸ்ல இருந்துகிறாங்க வாத்யார்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்னு பெரியவங்க சும்மாவா சொல்லிகிறாங்க?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

6 comments:

GTS said...

ஆகா, அரிய தகவல்.. மிக்க நன்றி..

உலகத் தமிழ் முன்னூக்கி
(Global Tamil Startups)

இத்தளத்தைப் பயன்படுத்தியதற்கு நன்றி..

வலைக்குழு : http://groups.google.com/group/Global-Tamil-Startups
வலைப்பூ : http://globaltamilstartups.blogspot.com/
மின்னஞ்சல் : Global-Tamil-Startups@googlegroups.com
உரையாடல் : tamilstartups@gmail.com

முகவை மைந்தன் said...

அரிய தகவல்கள்! சேத்துப்பட்டில் தெருத் தெருவாக சுற்றிய சென்னை நாட்கள் மறக்காதே! அதிலும் காரிங்க்டன் சாலையில் தான் முதன் முதலில் ஒரு பக்க அளவில் தன்விவர ஏடு படி எடுத்தேன்!!

தொடருங்கள்.

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க முகவை மைந்தன்,

அழகான தமிழ்ல அசத்தறீங்க!

//காரிங்க்டன் சாலையில் தான் முதன் முதலில் ஒரு பக்க அளவில் தன்விவர ஏடு படி எடுத்தேன்//

"ஹாரிங்டன் ரோட்ல மொதல் தபா பயோடேட்டா காப்பி எடுத்தேன்" அப்டீன்னு புரிஞ்சுகினேன். கரீட்டா வாத்யார்?

:-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் அதிகமாகி விட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக் கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.//


ஹு...ம்.. இவ்வளவு செய்தும் நமக்கு கொடுத்து வைக்க வில்லை. செட்டியாருக்கு உண்மையிலேயே பெரிய மனதுதான். அவரைப் பற்றி முதல் தடவையாக கேள்வி படுகிறேன். நன்றி ஜக்கு சார்.

Zero to Infinity said...

GREAT INFORMATION....I THOUGHT THOSE BUILDINGS ARE BUILD BY ENGLISH PEOPLE....THINK...ITS TIME TO REVISE OUR HISTORY BOOKS (I STUDIED METRIC SYLLABUS).....BY THE WAY...NOW YOU ARE LIKE KALAIVANAR.....MESSAGE WRAPPED WITH COMEDIES....!

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க ராஜ்குமாரு வாத்யார்,

//NOW YOU ARE LIKE KALAIVANAR.....MESSAGE WRAPPED WITH COMEDIES....!//

ஆஹா... இப்டி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ரணகளப் படுத்துறாங்கைய்யா!!!!

(இருந்தாலும் அப்ப அப்ப எதுனாச்சும் உருப்படியா பதிவு போடுன்னு நீங்க சொல்ற மெஸெஜ் புரியுது... ஹி..ஹி..)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு