பாரதியாருக்கு ஹார்மோனியத்தின் மீது இன்னா கோவம்?

தமிழ்நாட்டு மாதர்களுக்குள்ளே நல்ல பாட்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் அதற்கு ஹார்மோனிய பெட்டி ஒரு விக்கினமாக வந்து சேர்ந்திருக்கிறது. இந்த பெட்டி நமது நாட்டிலே பழகுவதினால் சங்கீதத்திற்கு பலவிதமான தீங்கு உண்டாவதாக வித்வான்களிலே பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதை நிறுத்துவதற்கு யாரும் வழி தேடவில்லை. நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள், வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்ட முடியாது. ஆதலால் அந்த வாத்தியத்தில் உள்ள விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாம் காட்டிலும் அந்த பெட்டி போடுகின்ற பெரும் கூச்சல்தான் என் காதுக்கு பெரும் கஷ்டமாக தோன்றுகிறது.

மேலும் சங்கீதத்தில் கொஞ்சமேனும் பழக்கம் இல்லாதவர்களுக்கெல்லாம் இந்தக் கருவியைக் கண்டவுடனே "ஷோக்" பிறந்து விடுகிறது. சத்தமுண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாக பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன் பக்கத்து சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால், "ஹோ" என்ற சத்தமுண்டாகிறது. (உடனே பாமரனும்) "நாம் அல்லவா இந்த இசையை உண்டாக்கினோம்?" என்று நினைத்துக் கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும், கறுப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டு தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்!! பாமரன் பூரித்து போகிறான். பிறகு சரளி, அலங்காரம், பிள்ளையார் கீதம், சங்கராபரண வர்ணம், 'பவநுத' கீர்த்தனம், இத்தனையும் ஹார்மோனியத்தில் மூன்று மாதத்திற்குள் பழக்கமாய் விடுகிறது. பாமரனின் மனத்திலே "நாம் ஒரு வித்வான்" என்ற ஞாபகம் உறுதியாய் பதிந்து விடுகிறது. ராக விஸ்தாரங்களைத் தொடங்கி விடுகிறான்.

ஒரு வீட்டில் ஹார்மோனியம் வாசித்தால் பக்கதிலே ஐம்பது வீட்டிற்குக் கேட்கிறது. அறியாதவன் தன் அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்கு பிரச்சாரம் பண்ணவேண்டுமானால், அதற்கு இந்த கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை. வீணை தவறாக வாசித்தால் வீட்டிலுள்ள ஜனங்களுக்கு மாத்திரந்தான் துன்பம். ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்சை படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து சங்கீத உணர்ச்சி குறையும்படி செய்யவேண்டுமானால், கிராமந்தோறும் நாலைந்து ஹார்மோனியம் பரவும்படி செய்தால் போதும்.

- பாரதியார்

இப்ப ஜாம்பஜார் ஜக்கு: நம்ம பாரதியாருக்கு மீசிக்ல நல்லா ஞானம் உண்டுன்னு தெரியும். இருந்தாலும் அவருக்கு இந்த ஹார்மோனியம் மேல இன்னா வாத்யார் இவ்ளோ கோவம்? அதே மாதிரி சமீபத்துல நம்ம ஜவஹர்லால் நேருவுக்கும் இந்த ஹார்மோனியம் புடிக்காதுன்னும் அத்தொட்டு ஆல் இந்தியா ரேடியோல ரொம்ப நாள் ஹார்மோனியமே போடம இருந்தாங்கன்னும் அண்ணாத்த சொல்றாரு. அதுனால நம்ம பித்துக்குளி முருகதாஸு ரொம்ப நாளு ரேடியோல பாடாமயே இருந்தாராம்.


மெய்யாலுமா வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

4 comments:

இராகவன் நைஜிரியா said...

நைனா.. ஜக்கு நைனா சூப்பர் நைனா... எங்க இருந்து நைனா இதைப் பிடிச்ச.

சாம் தாத்தா said...

அது மெய்யாலுமா-ன்னெல்லாம் நமக்குத் தெரியாது ஜக்கு.

பித்துக்குளி முருகதாஸ் ஹார்மோனியம் கேட்டா.... அவர் குரலா ஹார்மோனியமா -ன்னே பிரிச்சுப் பாக்க முடியாத அளவு கிறக்கமுண்டாக்கும். ஆன்மீகக் கிறக்கம்.

சரி ஜக்கு. ஒரு சவால்.
மெட்ராஸ் பாஷைல ஒரு கவிதை எழுத முடியுமா உங்களால.?

ஜாம்பஜார் ஜக்கு said...

//எங்க இருந்து நைனா இதைப் பிடிச்ச//

இராகவன் வாத்யார்,

நம்ம பாரதியாரோட கவிதைகளை பட்ச்ச அளவுக்கு அளவுக்கு அவரோட ப்ரோஸ் வர்க்கை நம்ம யாருமே படிக்கலைன்றது கொஞ்சம் வருத்தமான மேட்டர்தான் வாத்யார். அவரோட சங்கீத விஷயம் அப்டீன்ற கட்டுரை கெடைச்சா படிச்சா ஒரு தபா படிச்சு பாருங்க. பாஷை தெரியாம பாட்டு பாடற வித்வான்களை "தமிழனுக்கு ஈயக் காதுன்னு" ஒரு கிழி கிழிச்சு துவைச்சு காயப் போட்டு இருப்பாரு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

சாம் தாத்தா,


//பித்துக்குளி முருகதாஸ் ஹார்மோனியம் கேட்டா.... அவர் குரலா ஹார்மோனியமா -ன்னே பிரிச்சுப் பாக்க முடியாத அளவு கிறக்கமுண்டாக்கும். ஆன்மீகக் கிறக்கம்.//

மெய்யாலுமே அனுபவிச்சுருக்கீங்க வாத்யார்! ஒரு தபா அவுர நேர்ல சந்திச்ச போது, "நான்" அப்டீங்கற வார்த்தையை அவர் யூஸ் பண்றதே இல்லைங்கறதைப் பார்த்து ஒரே ஆச்சரியமா பூட்சு! "நான் பாம்பே போறேன்" அப்டீங்கறதை "இவன் பாம்பே போறான்" அப்டீன்னுதான் சொல்றாரு அந்த பெரிவரு.


//சரி ஜக்கு. ஒரு சவால்.
மெட்ராஸ் பாஷைல ஒரு கவிதை எழுத முடியுமா உங்களால.?//


எங்கிட்ட, எங்கிட்ட, எங்க்கிட்டயேவா? (தருமி ஸடைல்ல படிக்கவும்!!)
இத்த ஒரு தபா படிச்சு பாருங்க. ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு