அந்த அம்மா ரொம்ப அதிர்ஷடசாலி என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். அவருக்கு மூன்று பிள்ளைகள். எல்லாருமே வெளிநாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். முன்று பேருக்குமே பணம் மரத்தில் காய்த்தது.
அந்த வருடம் அன்னையர் தினம் வந்தது. அம்மாவுக்கு யார் என்ன பரிசு கொடுத்தார்கள் என்று சகோதரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
முதல்வன் சொன்னான்: "மூவாயிரம் சதுர அடியில் சலவைக் கல் பதித்த பங்களா ஒன்றை நான் அம்மாவுக்காக கொடுத்து இருக்கிறேன். விலை கிட்டதிட்ட மூணு கோடி. இருந்தாலும் பெற்ற தாய்க்கு செய்யும் போது இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, சேச்சே, இல்லவே இல்லை!"
மற்ற இரண்டு பேரும் அசந்து போனார்கள்.
இரண்டாமவன் சொன்னான்: "அம்மாவுக்கு லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் ஒன்றை வாங்கித் அனுப்பி வைத்திருக்கிறேன். இனிமேல் அம்மா எங்கே போனாலும் அதில்தான் போக வேண்டும். விலை கிட்டதட்ட ஒண்ணரை கோடி. இருக்கட்டுமே. அம்மாவுக்கு செய்யும் போது விலையெல்லாம் பார்க்க முடியுமா?"
மற்ற இரண்டு பேரும் சந்தோஷப் பட்டார்கள்.
மூன்றாமவன் சொன்னான்: "அம்மாவுக்கு ஒரு ஆச்சரியமான கிளி ஒன்றை பரிசாக அனுப்பி இருக்கிறேன். கிளி என்றால் சாதாரண கிளி இல்லை. நான்கு பாஷைகளில் நன்றாகப் பேசத் தெரிந்த அதிசயக் கிளி. கிட்டதிட்ட இருபது ப்ரொஃபசர்கள் பத்து வருடங்களாக ட்ரெயினிங் கொடுத்த கிளி. அம்மா தனியாக இருக்கும் போது பேச்சுக்கு துணையாக இருக்கும் அல்லவா, அதனால் தான் விலையைப் பார்க்காமல் அதை வாங்கி அனுப்பினேன்!"
மற்ற இரண்டு பேரின் ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
மூன்று பேருடைய பரிசுகளில் எது உயர்ந்தது என்று சொல்ல முடியவில்லை. ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக இருந்தது. அம்மாவிடமிருந்து என்ன பதில் வரும் என்று மூன்று பேருமே ஆவலோடு காத்திருந்தார்கள்.
பதிலும் வந்தது.
...
அன்புள்ள மகனுக்கு, வீடு நன்றாக இருக்கிறது. மிகப் பெரியதாக இருக்கிறது. எனக்கு வயதாகி விட்டது. நடக்க முடியவில்லை. கண்ணும் சரியாகத் தெரியவில்லை. எனவே நான் வாசல் கதவுக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய அறையை மட்டும் உபயோகப் படுத்திக் கொள்கிறேன். சலவைக் கல் காலுக்கு குளிர்ச்சி அதிகமாகி உடம்பு படுத்துகிறது. இருந்தாலும் நீ அன்போடு கொடுத்த வீடு என்பதால் காலில் எப்போது செருப்பு அணிந்து நடக்கிறேன். நீ குழந்தையாக இருக்கு போது உனக்கு முதல் முதலில் சிவப்புக் கலரில் செருப்பு வாங்கியது ஞாபகம் வருகிறது.
...
அன்புள்ள மகனுக்கு, கார் நன்றாக இருக்கிறது. என்னால் இப்போதெல்லாம் வெளியே போக முடிவதில்லை. தள்ளாமை அதிகமாக இருக்கிறது. கார் நீலக் கலரில் அழகாக இருக்கிறது. ஆனால், பக்கத்து வீட்டுப் பெண் அது மஞ்சள் கலர் என்கிறாள். ஜன்னல் வழியாக நீ வாங்கிக் கொடுத்த காரை தினமும் பார்த்து, உன்னைப் பார்த்தது போல சந்தோஷப் படுகிறேன்.
...
...
...
...
அன்புள்ள மகனுக்கு, நீ எனக்கு உபயோகமான பரிசை அனுப்பியிருக்கிறாய். நீ அனுப்பியதை பக்கத்து வீட்டுப் பெண் சூப் செய்து கொடுத்தாள். சிக்கன் சூப் ரொம்ப நன்றாக இருந்தது! நீ சின்ன வயதில் சிக்கன் சூப் என்றால் விரும்பி சாப்பிடுவாய். உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
......
அவ்ளோதான் கதை. Mother's Day அன்னிக்கு ஒரு நிமிட் நின்னு யோசிங்க வாத்யார்!
இப்போ, கேள்வி:
Mother's Day எந்த தேதியில் கொண்டாடப் படுகிறது? (கூகுளாண்டவரை கேட்பவர்கள் போட்டியிலிருந்து நீக்கப் படுவார்கள்!)
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
41284